எனது பள்ளிப் பருவத்தில் இரண்டே இரண்டு நூலகங்கள்தான் எனதூரில் இருந்தன. ஒன்று எனது பள்ளியில் இருந்த நூலகம், மற்றொன்று பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த செளடாம்பிகா நூலகம். பள்ளி நூலகத்தில் பாரதியார் கவிதைகளையும், திருக்குறளையும் தவிர வேறு புத்தகங்களைப் பார்க்க இயலாது. அதை வாங்குவதற்கே மாலையில் இருந்து வரிசையில் காத்திருக்க வேண்டும். அதனால் மற்றக் கதைப் புத்தகங்களை வாசிக்க வேண்டுமானால் செளடாம்பிகா நூலகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருந்தது. இந்த நூலகம் மிகவும் சிறியதாக அப்போது இருந்தது. சில காமிக் புத்தகங்களும், வார இதழ்களும்தான் அங்கு இருக்கும். அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறு பேர் உட்கார்ந்து படிக்கலாம். (தற்பொழுது ஒரு பெரிய கட்டிடத்திற்கு நூலகம் மாறி இருப்பதுடன், டாட் நெட் தொடர்பான புத்தகங்கள் கூட வைத்துள்ளார்கள்!). அதனால் அந்த நூலகம் எப்பொழுதும் கூட்டமாகவே இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கும்.
ராபின்சன் குருஸோ - நான் இந்தப் புத்தகத்தை அந்த நூலகத்தில்தான் முதன் முதலில் படித்தேன். இந்த ‘முதன் முதலில்’ என்பது நிகழ்ந்து பத்து வருடங்கள் ஆகி விட்டாலும், இன்னும் அந்தப் புத்தகத்தை படித்த போது இருந்த ஆச்சர்யமும், ஆர்வமும் நன்றாக நினைவில் உள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்த புகழ்பெற்ற “The Life and Strange Surprising Adventures of Robinson Crusoe“ என்ற புத்தகத்தின் தமிழாக்கம்தான் “ராபின்சன் குருஸோ”. கடல் பயணம் மேற்கொள்ளும் ராபின்சன் குருஸோவின் கப்பல் புயலில் சிக்கி உடைய, தனியாளாக ஒரு தீவில் ஒதுங்குகிறான் குருஸோ. ஆள் நடமாட்டமில்லாத அந்தத் தீவில் தனியாக நாட்களைக் கடத்த நேரிடுகிறது. அப்போது அங்கே ஒரு ஆதிவாசி மனிதனைச் சந்திக்கும் குருஸோ, அவனுக்கு Friday என்று பெயரிட்டு அவனுடன் நட்பாக பழக ஆரம்பிக்கிறான். இறுதியில் ஒரு கப்பல் வந்து குருஸோவைக் காப்பாற்றுவதுதான் புத்தகத்தின் மீதிக் கதை.
நேற்று ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் “ராபின்சன் குருஸோ”-வின் திரைப்படம் திரையிடப்பட்டது. மேற்கண்ட புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். ஆனால் புத்தகத்தை படித்த போது இருந்த ஆர்வமும், ஆச்சர்யமும் படத்தில் இல்லை என்றுதான் கூற வேண்டும். இயக்குனர்களுக்கு, ஏற்கனவே புத்தகமாக வெளிவந்த கதைய உயிரோட்டத்துடன் திரையில் கொண்டு வருவதில் பல தடைகள் உள்ளன. அதிக எதிர்பார்ப்பும், கதை ஏற்கனவே வெளிவந்து விட்டதாலும், இவ்வாறு எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். எனது கருத்தில் ராபின்சன் குருஸோ படத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனாலும், இதில் வருகிற ஒரு காட்சி எனக்கு மிகவும் பிடித்தமானது. ராபின்சனும், ஃப்ரைடேவும் இரவு உணவுக்குப் பிறகு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, ராபின்சன் ஃப்ரைடேவுக்கு அன்புதான் கடவுள் என்று புரிய வைக்க முயற்சி செய்கிறான். ஆனால், ஃப்ரைடே வணங்குவது முதலையை (ஆதிவாசி அல்லவா!?). அதனால் ஃப்ரைடே ராபின்சன் கூறுவதை ஒப்புக் கொள்ள மறுக்கிறான். பலத்த விவாதத்திற்கு பிறகு ஃபரைடே ராபின்சனைப் பார்த்து
நான் எனது கடவுளை உனக்குக் காட்டுகிறேன். நீ உனது கடவுளைக் காட்டினால் நம்புகிறேன்எனக் கூற, ராபின்சன் அமைதியாகத் திரும்பி செல்கிறான்.
புத்தகமாக படிக்கையில் இதை போல ஆச்சர்யமூட்டும் கதை கிடையாது (எனது கருத்து!). நீங்கள் இன்னும் படித்திருக்கவில்லையென்றால் ஒரு முறை படித்துப் பாருங்கள்! (இணையத்தில் ஆங்கிலத்தில் படிக்க)
0 கருத்துக்கள்:
Post a Comment